சாராகரி போர்

122ஆவதுசராகரிநினைவுதினம்

போலோசோநிஹால்சாத்ஶ்ரீ_அகால்

இப்படி ஒரு கூற்று உண்டு, கடவுள் இந்த உலகத்தை உருவாக்கிய பின்னர் கொஞ்சம் பாறைகளும் கற்களும் நிறைந்த நிலபரப்பு ஒன்றை அப்படியே விட்டார். அது தான் ஆஃப்கானிஸ்தான் . மிகவும் கொடுரமாக இரக்கமற்ற நிலப்பரப்பு அது.

இன்று வரை ஆஃப்கானிஸ்தானம் யாருக்கும் முழுமையாக அடங்கவில்லை ஒருவரை தவிர சீக்கிய பேரரசர் மஹாராஜா ரஞ்சித் சிங். 1839ல் அவருடைய மரணத்திற்கு பின்னர் ஆஃப்கானிஸ்தானம் சீக்கியர்களின் கைப்பிடியில் இருந்து நழுவியது. அதற்கு பின்னர் யாராலும் மீண்டும் அவர்களை அடக்க முடியவில்லை ஆங்கிலேயர்கள் உட்பட ..

ஆங்கிலேயர்களின் தீராஹ் படையெடுப்பு முழு சக்தியை பெருக்கும் நேரம் நெருங்கி கொண்டிருந்தது.ஆங்கிலேயர்கள் வடமேற்கு எல்லை பகுதியை மிக முக்கியமாக கருதினர் ஆனால் அவர்களுடைய பிடியில் இருக்க வேண்டுமானால் ஆஃப்கானிஸ்தான் எல்லையோரம் மஹாராஜா ரஞ்சித் சிங் கட்டிய கோட்டைகளை பயண்படுத்த வேண்டும்.

1897 செப்டம்பர் மாதம் குளிர் அதிகமானது காரணம் பனிக்காலம் தொடங்கி இருந்தது. தீடிரென ஆப்கானியர்கள் போர் பிரகடனம் செய்து போர் தொடுத்தனர்.

ஹிந்துகுஷ் மலைதொடரில் சாமனா மலைப்பகுதியில் லாக்ஹார்ட் கோட்டையும் , சுலைமான் மலைப்பகுதியில் குலிஸ்தான் கோட்டையும் சில மைல்கள் தொலைவில் அமைந்திருந்தன. இந்த இரு கோட்டைகளின் நடுவே சராகரி எனுமிடத்தில் தகவல் தொடர்பு வசதிக்காக ஒரு சிறிய தகவல் தொடர்பு நிலை இருந்தது. அதன் மேற்கூரையில் ஒரு ஹீலியோக்ராஃபிக் தகவல் தொடர்பு கோபுரம் இருந்தது.

இந்த நிலையை பாதுகாக்கும் பொறுப்பு அன்றைய 36ஆவது சீக்கிய ரெஜிமென்ட்டிடம் இருந்தது. ஆஃப்கானிய பதான்கள் பல முறை லாக்ஹார்ட் கோட்டையையும் , குலிஸ்தான் கோட்டையையும் தாக்கினர். இவர்களின் தாக்குதல்களை 36ஆவது சீக்கிய ரெஜிமென்ட் வீரர்கள் முறியடித்தனர். செப்டம்பர் 3 மற்றும் 9ஆம் தேதிகளில் அஃப்ரிடி பழங்குடியினர் நடத்திய தாக்குதல்களையும் முறியடித்தனர். ஆப்கானியர்கள் இந்த இரு கோட்டைகளையும் வீழ்த்த முடியாது ஆனால் சராகரி நிலையை வீழ்த்தினால் இரு கோட்டைகளுக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு எளிதில் வெற்றி பெறலாம் என கணக்கிட்டனர். போர் உத்திகளின் படி அது மிகவும் சரியானதும் கூட..

இந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் சராகரி நிலைக்கு இன்னும் சில வீரர்களை கூடுதலாக அனுப்பினர். இப்போது அங்கு ஹவில்தார் இஷார் சிங் தலைமையில் அவர் உட்பட 21 வீரர்கள் இருந்தனர்.

செப்டம்பர் 12 , 1897 – 10ஆயிரம் ஆஃப்கானியர்கள் சராகரி நிலைக்கு படையெடுத்து வந்தனர்.

உடனடியாக தகவல் தொடர்பு பணியில் இருந்த சிப்பாய் குர்மூக் சிங் 36ஆவது சீக்கிய ரெஜிமென்ட்டின் தலைமை கட்டளை அதிகாரியாக இருந்து லெப்டினன்ட் கர்னல் . ஜான் ஹாட்டனுக்கு சிக்னல் செய்து தங்கள் நிலை மீது தாக்குதல் நடக்கிறது என்றும் மேலதிக படைகளை அனுப்பமாறு கேட்டார் அதற்கு லெப்டினன்ட் கர்னல் ஹாட்டன் ஏற்கனவே இங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் மேலதிக படைகளை இப்போது என்னால் அனுப்ப முடியாது என கூறினார்.

ஹவில்தார் இஷார் சிங் தலைமையில் அந்த 21 சீக்கிய வீரர்களும் போரிட உறுதி பூண்டனர். பின்வாங்கவோ , புறம் காட்டவோ , சரணடையவோ மாட்டோம் எனவும், என்ன நடந்தாலும் நின்ற இடத்தில் போரிட்டு , போரிட்ட இடத்திலேயே மரணிப்போம் என உறுதி ஏற்றனர். சாவுக்கு அவர்கள் கொடுத்த மரியாதையை இதிலிருந்து அறிய முடியும்.

சிப்பாய் பகவான் சிங் முதலில் வீரமரணமடைகிறார். சக வீரர்கள் அவரது உடலை நிலையின் உட்பகுதிக்கு எடுத்து சென்றனர். ஆஃப்கானியர்கள் ரத்த வெறியில் ஊளையிட்டு ஆரவாரம் செய்தனர். ஆனாலும் சீக்கியர்கள் துளியும் அசரவில்லை.இருமுறை நிலையின் கதவை ஆஃப்கானியர்கள் தாக்கினர் இரண்டு முறையும் பலர் கொல்லப்பட்டு கடும் சேதத்துடன் விரட்டி அடிக்கப்பட்டனர்.

ஆஃப்கானியர்களின் தாக்குதலும் கொடுரமாக இருந்தது. இதனால் நிலையின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழ ஆஃப்கானியர்கள் நிலையின் உள்ளே புகுந்தனர். சில வீரர்கள் ஆஃப்கானியர்களுடன் வெறும் கைகளால் போரிட்டனர். ஹவில்தார் இஷார் சிங் தனது வீரர்களை நிலையின் உட்பகுதிக்கு செல்ல கட்டளையிட்டார் அவர்கள் சென்றதும் பல்லாயிரம் ஆஃப்கானியர்களை தனி ஒருவராக எதிர்கொண்டார் . அசாதாரணமான வீரத்துடன் போரிட்டு பல எதிரிகளை கொன்றுவிட்டு வீரமரணமடைந்தார்.

சீக்கிரமே நிலையின் உட்பகுதியிலும் ஆஃப்கானியர்கள் புகுந்தனர். ஒருவரை தவிர மற்ற அனைத்து சீக்கிய வீரர்களும் போரிட்டு எதிரிகள் பலரை கொன்றுவிட்டு வீரமரணமடைந்தனர்.

21 பேரில் சிப்பாய் குர்மூக் சிங் மட்டுமே உயிருடன் இருந்தார். உடனடியாக தனது தகவல் தொடர்பு கருவி மூலம் லெப்டினன்ட் கர்னல் ஹாட்டன் அவர்களிடம் தான் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் , தனது தகவல் தொடர்பு பணியை நிறுத்தி விட்டு சண்டையில் பங்கெடுக்க அனுமதி அளிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். லெப்டினன்ட் கர்னல் ஹாட்டனும் அனுமதி அளித்தார். சிப்பாய் குர்மூக் சிங் தனது தகவல் தொடர்பு கருவிகளை ஒரு தோல் பையில் மிகுந்த கவனத்துடன் பத்திரப்படுத்தி வைத்தார்.

பின்னர் களமிறங்கி எதிரிகளை துவம்சம் செய்தார் அதனை ருத்ர தாண்டவமாடினார் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். எதிரிகள் அவருக்கு பயந்து அவரை நெருங்க அஞ்சி எரித்தாவது கொல்ல வேண்டும் என்ற நோக்கில் மொத்த நிலைக்கும் தீவைத்தனர் ஆனால் சிப்பாய் குர்மூக் சிங் அதற்குள் 20 எதிரிகளை ஒற்றை ஆளாக கொன்றிருந்தார். அவர் மீதும் நெருப்பு பற்றிக்கொண்டது.

அவரது தோல் எரிய தொடங்கியது, தோல் எரிந்து கருக கருக வெறித்தனமாக சண்டையிட்டார். தன்னுடலில் நெருப்பு கொழுந்து விட்டு எரியும் போது சீக்கிய படையின் போர்க்குரலான “போலோ சே நிஹால், சாத் ஶ்ரீ அகால்” என்பதை வெறித்தனமாக உச்சரித்தார். அதை கர்ஜனை எனத்தான் கூறவேண்டும் அத்துனை தீரம் நிரம்பிய தொனியில் அந்த வார்த்தைகளை உச்சரித்தார் சிப்பாய் குர்மூக் சிங்.வெறித்தனமான இந்த குரல் ஆஃபகானியர்களை நடு நடுங்கி போக செய்தது.

சிறிது நேரத்தில் அங்கே மயாண அமைதி நிலவியது. 21 மாவீரர்களும் வீரமரணமடைந்திருந்தனர்.

(Chirian te mein baaz tudaun,
Tabe Gobind Singh Naam kahaun.)

சிரியன் தே மெய்ன் பாஸ் துடாவூன்,
தாபே கோபிந்த் சிங் நாம் கஹாவூன்

அதாவது குரு கோபிந்த் சிங் பெயரால் சிறு பறவை பருந்துடனும் சண்டையிடும் என்பதே அர்த்தமாகும். இது சீக்கியர்களின் போர்க்குரலாகவும் கருதப்படுகிறது. அவர்களுடைய நம்பிக்கைக்கு சாட்சி.
இந்த கூற்றை அவர்கள் உண்மையாக்கினர்.

சற்றே நினைத்து பாருங்கள் ஏழு மணி நேரத்திற்கு 21 வீரர்கள் 10,000 எதிரிகளுடன் போர் புரிந்ததை…

36ஆவது சீக்கிய படைப்பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர். சால்ஸ் டெஸ் வாவ்க்ஸ் கூறியதாவது “என்னுடைய 21வீரர்களும் பேய்களை போல் போர் புரிந்தனர்” என்பதாகும்.

நினைத்து பாருங்கள் ஒரு ஆங்கிலேய அதிகாரி இப்படி கூற வேண்டுமெனில் எத்துனை தீரத்துடன் அவர்கள் சமர் புரிந்திருப்பார்கள் என…
நிச்சயமாகவே உடல் சிலிர்த்து விடும் வீரம் தான் !!

பின்னர் ஆஃபகானியர்கள் குலிஸ்தான் கோட்டையை தாக்க தொடங்கினர் ஆனால் அந்த 21மாவீரர்களின் போராட்டத்தால் மேலதிக படைகள் வருவதற்கான நேரம் கிட்டியிருந்தது. பிரங்கி படையின் தாக்குதலில் பல ஆஃப்கானியர்கள் உயிரிழந்தனர். செப்டம்பர் 14ஆம் நாள் சராகரி நிலை மீண்டும் கைபற்றப்பட்டது.

ஹவில்தார் இஷார் சிங் மற்றும் அவரது 20வீரர்களால் 180 ஆஃப்கானியர்கள் கொல்லப்பட்டு , பல்லாயிரம் பேர் காயபடுத்தப்பட்டனர்.

பின்னர் பிரங்கி படை தாக்குதலில் 600க்கும் அதிகமான ஆஃப்கானியர்கள் கொல்லப்பட்டு பல்லாயிரம் பேர் காயமடைந்தனர்.

போரின் நடுவே நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும் அதாவது ஆஃப்கானியர்களின் ஒரக்ஸாய் தலைவர் குல் பாட்ஷா சீக்கியர்களிடம் போரிடாமல் ஒதுங்கினால் மன்னிப்பு வழங்கி பாதுகாப்பாக அனுப்பி வைப்பதாகவும் கூடவே அணைவருக்கும் தங்கம் தருவதாகவும் கூறினார். ஆனால் சீக்கியர்கள் அதற்கு உடன்படவில்லை.

நம்மில் பலர் கேட்கலாம் அந்த 21சீக்கியர்களும் ஏன் ஆங்கிலேயர்களுக்காக இவ்வளவு தீரத்தோடு போரிட வேண்டும் ?? அவர்கள் நம் இந்திய மக்களை அடிமைபடுத்தி அல்லவா வைத்திருந்தார்கள் ??

இதற்கு பதில் இதோ ” அந்த 21 சீக்கியர்களும் ஆங்கிலேயர்களுக்காக போரிடவில்லை,

மாறாக தங்களது கவுரவத்தை காக்கவும், தங்கள் ரெஜிமென்ட்டிற்கு விசுவாசமாகவும் போரிட்டனர். சீக்கியர்களை பொறுத்தவரை சரணடைவதை விட மரணம் மேலானது என்ற கொள்கை முக்கியமானதாகும்.

மேலும் இந்தியர்களை அடிமைகள் என நினைத்திருந்த மேலை நாட்டவர்களின் பிடரியில் ஓங்கி அடிக்கும் வகையில் இந்தியர்கள் மாவீரர்கள் என அந்த 21பேரும் தங்கள் உயிர் கொடுத்து பிரகடனம் செய்தனர்.

நினைத்து பாருங்கள் அவர்கள் மட்டும் அன்று போரில் பின்வாங்கி இருந்தால் இன்று நம்மை கோழைகள் என்றும், அடிமைகள் என்றும், நம்பிக்கை துரோகிகள் என்றும் இந்த உலகம் இகழ்ந்திருக்கும் ஆனால் மாறாக இந்தியர்களின் வீரம் இன்று உலகம் முழுவதும் மெச்சப்படுகிறது. இதற்காகவே நாம் அந்த 21மாவீரர்களுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

இதற்காக தான் தங்களை காப்பாற்றி கொள்ள கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் உதறிவிட்டு 10ஆயிரம் ஒரக்ஸாய் ஆஃப்கானியர்களை அந்த 21பேரும் எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்தனர்.

இந்த போர் மனித குலம் கண்ட மிகச்சிறந்த கடைசிநேர சண்டைகளில் (Last stands)ஒன்று . மேலும் தங்கள் எண்ணிக்கையை விட பன்மடங்கு அதிகமான படையை எதிர்த்து தங்கள் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் பலரை கொன்றது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

அந்த 21மாவீர்களுக்கும் ஆங்கிலேய அரசு இந்தியன் ஆர்டர் ஆஃப் மெரிட் (Indian Order of Merit) என்கிற விருதை வழங்கி கவுரவித்துள்ளது. அது இன்றைய பரம வீர் சக்கரம் விருதுக்கு நிகரானது.

இதில் சோகமான விடயம் என்னவெனில் நம் இந்தியர்களில் பல பேருக்கு இப்போர் பற்றி தெரியாது.

இங்கிலாந்து அரசு அவர்களை கவுரவித்துள்ளது. ஃபிரெஞ்சு அரசு அவர்களுடைய தேசிய கல்வி கொள்கையில் இந்த போரை சேர்த்து தங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் வீரத்தை கற்று கொடுக்கிறது ஆனால் இந்தியாவில் பெயரளவில் ஒர் நினைவு நாளாக மட்டுமே அனுசரிக்க படுகிறது.

சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்றுவரை இந்திய ராணுவம் இந்த நிகழ்வை கல்வி கொள்கையில் சேர்த்து நம் தேச குழந்தைகளுக்கு வீரத்தை கற்று கொடுக்க அரசை வலியுறுத்தி வருகிறது ஆனால் இன்று வரை அரசியல்வாதிகளும் , குடிமைப்பணி அதிகாரிகளும் ராணுவத்தின் கோரிக்கையே ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.
😔😔

அந்த 21 மாவீரர்களின் பெயர்கள்,
1) ஹவில்தார். இஷார் சிங்,
2) நாயக். லால் சிங்
3) லான்ஸ் நாயக். சந்தா சிங்
4) சிப்பாய். சுந்தர் சிங்
5) சிப்பாய். ராம் சிங்
6) சிப்பாய். உத்தர் சிங்
7) சிப்பாய். சாஹிப் சிங்
8) சிப்பாய். ஹீரா சிங்
9) சிப்பாய். ஜீவன் சிங்
10) சிப்பாய். தயா சிங்
11) சிப்பாய். போலா சிங்
12) சிப்பாய். நாராயண் சிங்
13) சிப்பாய். குர்மூக் சிங்
14) சிப்பாய். ஜீவன் சிங்
15) சிப்பாய். குர்மூக் சிங்
16) சிப்பாய். ராம் சிங்
17) சிப்பாய். பகவான் சிங்
18) சிப்பாய். பூட்டா சிங்
19) சிப்பாய். ஜீவன் சிங்
20) சிப்பாய். நந்த் சிங்
21) சிப்பாய். பகவான் சிங்

குறிப்பு:

அன்றைய 36ஆவது சீக்கிய ரெஜிமென்ட் இன்று இந்திய ராணுவத்தின் சீக் ரெஜிமென்ட்டின் 4ஆவது பட்டாலியனாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்திய ராணுவம் இந்த நாளை மிகுந்த பெருமையுடன் “சராகரி தினம்” (Saragarhi Day) என்ற பெயரில் அனுசரித்து வருகிறது.

போர்க்குரல்:
போலோ சே நிஹால்,
சாத் ஶ்ரீ அகால் !!

என்றால் இறைவனே எல்லாம் வல்லவன் என்று நம்பும் ஒருவன் நிரந்தரமாக ஆசீர்வதிக்கப்பட்டவன் ஆவான்.

குறிக்கோள்:
நிஷ்சய் கர் அப்னி ஜீத் கரோன்

அதாவது அர்பணிப்புடன் நான் வெற்றி பெறுவேன் என்பதாகும்.

சமீபத்தில் வெளிவந்த கேசரி படம் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது எனவே நண்பர்களே நிச்சயமாக நீங்கள் அதனை காண வேண்டும் உங்கள் நண்பர்களிடமும் தெரியபடுத்துங்கள்.

இந்த பதிவையும் அதிகமாக பகிருங்கள் காரணம் நாம் 300ஸ்பார்ட்டன்கள் (300 Spartans) பற்றி வியந்து பேசுகிறோம் ஆனால் 21 இந்தியர்களை பற்றி பேசுவதில்லை.

ஜெய்ஹிந்த்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *